OURS IS NOT A BETTER WAY, OURS IS MERELY ANOTHER WAY - From: Friendship with God
எமது வழிதான் சிறந்ததென்பதல்ல, இதுவும்கூட இன்னொருவழி அவ்வளவுதான்
-தமிழாக்கம்

Tuesday, August 23, 2022

முதலாவது பாகம்

இறைவனுக்கும் எனக்கும் முதல் அறிமுகம் எப்போ என்று எனக்கு ஞாபகமில்லை. நான் இந்து மதத்தைச் சேர்ந்தவள் என்பதால் பெற்றார் வெள்ளிக்கிழமைகளில் மாலை ஆறுமணிக்கு மேல் சாமியறையில் எல்லோரும் சேர்ந்து தேவாரம் பாடும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். அப்போ அது பெற்றாருக்காகச் செய்வதாய் இருந்தாலும் சிறுகச்சிறுக மனம் ஒன்றி நானும் இறைவனை வணங்கத் தொடங்கினேன். மற்றைய நாட்களிலும் காலையும் மாலையும் முகம் கழுவி சாமி கும்பிடுவோம். அதாவது இறைவனை வணங்குவோம்.  உணவு உட்கொள்ள முன்பும் அப்படியே செய்வோம். அப்போ இடிமுழக்கம் தாக்கக்கூடாது கடவுளே என்றெல்லாம் இறைவனிடம் கேட்ட ஞாபகம். சில வேளைகளில் பெற்றார் தான் பழக்கினார்களோ தெரியாது. அதாவது எம்மை மீறிய விஷயங்களில் இறைவனுக்குக் கட்டுப்பாடு உள்ளது; அப்படியான விடயங்களில் இறைவனை நாடலாமென்று அப்போ எனக்கு யாரோ சொல்லித் தந்திருக்க  வேண்டும். ஒரு தரம் எனக்கு ஞாபகமாயிருக்கிறது பாடசாலையில் ஏதோ ஒரு விளையாட்டில் பங்கு பெற ரன்னிங் ஷார்ட்ஸ் (running shorts) தேவையென்று டீச்சர் சொன்னதால் 'கடவுளே அந்த ரன்னிங் ஷார்ட்ஸ் இருக்க வேண்டும்' என்று பழைய ஒரு ரன்னிங் ஷார்ட்ஸ் இருக்க வேண்டுமென்று இறைவனை வேண்டிக் கொண்டு வந்து தேடி அது கிடைத்த ஞாபகம். அதற்கு இறைவனுக்கு நன்றி சொன்னேனோ என்று நினைவில்லை. இப்படியாகத்தான் இறைவனுக்கும் எனக்கும் முதல் தொடர்பு ஆரம்பித்தது. 

அப்போ எங்கள் ஊரில் ஒரு பெரியவர் ஏதோ ஒரு ஸ்கூலின் ஹெட்மாஸ்டராக இருந்திருக்க வேண்டும் அவருக்கு சுகயீனமென்று, பக்கவாதம் வந்து ஒருபக்கம் இழுத்துவிட்டது என்று பெரியவர்கள் பேசிக்கொண்டது காதில் விழுந்ததால் அவருக்குச் சுகம் வரவேண்டுமென்று இறைவனிடம் இரவு சாமி கும்பிடுகையில் கேட்டேன். அதிலிருந்து யாருக்காவது ஏதாவது சுகயீனமென்றால் சாமி கும்பிடுகையில் அவர்களுக்கும் சேர்த்துக் கும்பிடுவது வழக்கமாகி விட்டது. எல்லோரும் சாமி கும்பிடும் நேரத்திலும் பார்க்க நான் கூடிய நேரம் எடுப்பதை வீட்டிலுள்ள பெரியவர்கள் கவனித்திருக்கிறார்கள். எனக்கு இது தெரியாது. ஒரு நாள் எனது பெரிய அண்ணா என்னிடம் பக்குவமாக 'ஏன் இவ்வளவு நேரம் சாமி கும்பிடுகிறாய்?' என்று கேட்டார். நானும் வெகுளித்தனமாக உள்ளதைச் சொல்லிவிட்டேன். அதை அவர் ஏனையோரிடம் சொல்ல அது எல்லா இடமும் பரவி எனது பாடசாலையில் படிக்கும் ஒரு பெண் என்னிடம் 'நீங்கள் எல்லாருக்காகவும் சாமி கும்பிடுவீர்களா?' எனக்கேட்டாள்.  நான் ஆமென்றதற்கு அப்பெண் நீங்கள் கிறிஸ்தவராக இருந்திருக்க வேண்டுமென்றாள். அவள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவள். ஏனப்படிச் சொல்கிறாள் என அப்போது எனக்கு விளங்கவில்லை. வீட்டில் வந்து விளக்கம் கேட்டேன். அப்போ விளங்கிவிட்டது. (இது எனது ஆத்மீகத் தேடலேயன்றி ஒரு சமயத்தைச் சார்ந்ததல்ல என்பதால் இவ்விஷயத்தை இத்துடன் நிறுத்துகிறேன்.)

எமது வீட்டில் கோவிலுக்குப் போகும் வழக்கம் குறைவு என்றே சொல்லலாம். 'கோயிலாவதேதடா குளங்களாவதேதடா, கோவிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே' என்பதற்கேற்ப வீட்டில் தான் வழிபாடெல்லாம். அப்படியில்லையென்று சிலவேளைகளில் அம்மா கோவிலுக்குச் செல்லவேண்டுமென்றால் அப்பா, 'நான் படுத்திருக்கிறேன் என்னைச் சுற்றிக் கும்பிடு' என்று பகிடிக்குச் சொல்வார். ஆனால் சிலவேளைகளில் திவசம் என்று கோவிலுக்குச் சென்றால் அப்பா அப்படி பக்திப்பழமாக விழுந்து எல்லாம் கும்பிடுவார். எங்கள் வீட்டில் கோவிலுக்கு ஒரே போகும் ஒரேயொரு சீவன் சின்னண்ணர் தான். வெள்ளிக்கிழமை என்றால் போதும் வேட்டியுடுத்திக் கொண்டு பக்திப்பழமாகக் கோவிலுக்குச் செல்வார். அவருக்கு அடுத்தபடியாக சின்ன அக்காவைச் சொல்லலாம். அவரும் திருவிழாநாட்களில் ஒழுங்காகக் கோவிலுக்குச் செல்வார். விரதநாட்களிலும் விரதமிருந்து கோவிலுக்குச் சென்று வழிபடுவார். எனக்குப் பசி கிடக்க இயலாதென்பதால் விரதமிருக்கச் செல்வதில்லை. வளர்ந்தபின் பிறர் பகிடி பண்ணியதலோ அல்லது வேறு காரணத்துக்கோ விரதமிருக்கத் தொடங்கி விட்டேன். கந்தஷஷ்டி விரதக்கடைசி நாளன்று  உபவாசமிருந்து கோவிலுக்குச் சென்று அங்கே விழுந்து கும்பிடுகையில் உடல் பொருள் ஆவி எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து விழுந்து கும்பிட்ட ஞாபகம்.  
'நேர்த்திக்கடன்' என்று எல்லோரும் பேசிக்கொள்வார்கள். எனக்கு அது புரிவதில்லை. அதாவது இறைவனிடம் எனக்கு இதைச் செய்வாயென்றால் நானுனக்கு அதைச்செய்வேன் என்று கேட்பது. எதையும் உரிமையுடன் அம்மா அப்பாவிடம் கேட்பது போலக் கேட்டே எனக்குப் பழகிவிட்டது. ஆனால் வளர்ந்தபின் ஒரு சோதனை பாஸ் பண்ணினால் சரஸ்வதி பூசை ஒன்பது நாளும் உபவாசம் இருப்பேன் எனக் கேட்டு விட்டுப் பிறகு இன்னமும் கூட அதை நிறைவேற்றாமல் (எக்ஸாம் பாஸ் பண்ணியும் கூட) இருப்பது வேறு கதை. 
பாடசாலையில் எங்களுக்கு சமயவகுப்புகள் நடக்கும். இந்துப்பிள்ளைகள் ஒரு வகுப்பில் இந்துசமயம் படிப்பார்கள்; கிறிஸ்தவப்பிள்ளைகள் வேறொன்றில் கிறிஸ்தவ சமயம் படிப்பார்கள்; இஸ்லாம்பிள்ளைகள் இன்னொன்றில் இஸ்லாம் சமயம் படிப்பார்கள். எனக்குப் பிடித்த பாடங்களில் இந்துசமயமும் ஒன்று. அதிலும் கூடுதலாக சைவசித்தாந்தம் பிடிக்கும். 
'சிவாயநம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை.....'என்று தொடங்கும் ஒரு பாடலை சமயவகுப்பில் ஒருநாள் படித்த அன்று வீட்டில் வந்து பெரிய அண்ணாவிடம் விளக்கம் கேட்டதற்கு அவர், 'எப்போதும் நீ சிவாயநம என்று மனத்துள் நினைத்துக் கொண்டிருந்தால், எந்த ஒரு அபாயமும் வராது' என்று சொன்னார். அதிலிருந்து மனத்துள் ஒரே 'சிவாயநம' என்று சொல்லிக் கொண்டேயிருப்பேன். இரவில் படுக்கையில் 'சிவாயநம' சொல்லவியலாதே என்பதால் ஏதாவது ஒரேவிதமான ஐந்து பொருட்களைத் தேர்ந்து அவற்றில் அம்மந்திரத்தை வைத்துவிட்டுப் படுப்பேன்.         
வீட்டில் மச்சம், மாமிசம் சமைத்தால் நான் சாப்பிட மறுப்பேன். சாப்பாட்டு மேசையில் நாம் உணவு உட்கொள்ளும் போது அம்மா மீன்குழம்பை எமக்குப் பரிமாறுவதற்குக் கொண்டு வருகையில் நான் உணவுத்தட்டுடன் எழுந்து ஓடுவேன். அம்மா என்னைக் கலைத்துக் கொண்டு வந்து மீன்குழம்பை எனது தட்டில் போடுவா. என்னால் ஏனோ அதைச் சாப்பிடமுடியாது. தொண்டைக்குள்ளால் இறங்க மறுக்கும். மற்றவர்களெல்லாம் சாப்பிடுகையில் எனக்கு ஏன் சாப்பிட முடிவதில்லை என யோசிப்பேன். கடைசியில் நான் ஒரு தெய்வீகப் பிறவியாக்கும் என முடிவெடுத்தேன். அந்த வயதில் அப்பாவை சிவபெருமானாகவும் அம்மாவை உமாதேவியாராகவும் கற்பனை பண்ணும் வயதில் நான் அப்படி முடிவெடுத்தது பிழையில்லை என எண்ணுகிறேன்.
சின்னவயதில் ஒரே பேய்க்கனவுகள் வரும். எங்கள் வீட்டைச் சுற்றிப் பேய்கள் நின்று கொண்டு என்னைத் தரச் சொல்லிக் கேட்கும். அம்மா என்னைக் கொடுப்பதாகப் பயமுறுத்துவா. இப்போ இறந்தபின் ஆத்மாவின் நிலையென்ன என ஆராய்ச்சியெல்லாம் செய்கையில் அவைகளைப் பற்றியெல்லாம், மேலுலகைப் பற்றியெல்லாம் ஆராய்கையில் இந்த ஆவிபயம் இடையிடையே வருகையில் அம்மாவிடம் சிறிய வயதில் சாப்பிடாவிட்டால் பேய் பிடிக்கும் என்று பயமுறுத்தினீர்களா எனக்கேட்டுப் பார்த்தேன். அவர்கள் அப்படிப் பயமுறுத்தவில்லை என்றார்கள்.
ஆத்மீகமென்றால் இறைவனைப் பற்றித்தானே ஆராயவேண்டும் ஏன் ஆவிகளைப்பற்றி ஆராயவேண்டுமென யாரும் நினைக்கலாம். நானும் அப்படித்தான் முதலில் நினைத்தேன். எனக்கு சகோதர முறையான ஒருவர் ஒருநாள் ஒரு மீடியம் என்று சொல்லப்படுகின்ற ஆவிகளுக்கும் எங்களுக்கும் இடையே ஊடகமாகச் செயல்படுகின்ற ஒரு ஆங்கிலேயரின் புத்தகத்தைக் கொண்டு வந்து தந்தார், 'இதனை வாசித்துப் பாருங்கோ' என. நான் அப்போ நினைத்தேன் ஏன் மீடியத்தின் புத்தகத்தை வாசிக்க வேண்டுமென. ஆனால் வாசிக்கத்தான் தெரிந்தது இறப்பின் பின் நடப்பது என்ன என அறிந்தாலே அரைவாசி ஆத்மீக ரகசியத்தை அறியலாமென.          
சைவசித்தாந்தத்திலே வரும் ஆத்மாவைப் பற்றிய விளக்கங்களெல்லாம் (உதாரணமாகப் பதி பசு பாசம்) விழுந்து விழுந்து படிப்பேன். எனக்கு சமயப்பாடத்திலேயே சைவசித்தாந்தம் தான் மிகப்பிடித்த பகுதி. சாதாரணதரப் பரீட்சையில் விஞ்ஞானப்பாடங்களுடன் சமயத்திலும் கூட எனக்கு விசேட சித்தி வந்தது. கனடா வந்த பின் ஒருதரம் சாயி சென்டரில் நடந்த சற்சங்கக் கூட்டமொன்றில் வெள்ளைக்காரப் பெண்மணி ஒருவர் அத்வைதம், த்வைதம் என்பதைத் தன்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறதாவெனக் கேட்டபோது என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறதென நான் சொன்னதை அப்பெண்மணி நம்பவில்லையெனத் தெரிந்தது. நான் இதெல்லாம் பாடசாலையிலேயே படித்து விட்டேனெனப் பெருமையடித்து அவ்வயதான பெண்ணின் மனத்தை நோகடிக்க விரும்பாமல் அப்படியே விட்டுவிட்டேன்.
நாம் சிறுவர்களாக இருக்கும் போது எங்கள் வீட்டுக்கருகாமையில் இருந்த ஒரு குடும்பத்தில் மனைவிக்கு ஒரே கோவிலுக்குச் செல்லவேண்டும். கணவன் அப்படியல்ல. அவர்களுக்கு மூன்று குழந்தைகள் (6,7,8 வயதுகளிருக்கலாம்). கோவிலுக்குச் சென்றால் அப்பெண் பக்திப்பழமாக இருப்பார் (சில சமயங்களில் அக்காவுடன் கோவிலுக்குச் செல்லும் போது கவனித்திருக்கிறேன்). வீட்டிலும் கோவில் மணி கேட்டால் அது நிற்கும் வரையிலும் தலையில் குட்டிக் கும்பிட்டுக் கொண்டேயிருப்பார். வெள்ளிக் கிழமைகளில் என்று நினைக்கிறேன் பிட்டு அவிப்பதற்குக் குக்கரில் அளவாக மண்ணெண்ணையை விட்டுவிட்டு பிட்டை அவிய விட்டுவிட்டுக் கோவிலுக்குச் சென்று வருவா. எண்ணெய் முடிந்ததும் குக்கர் அணைக்கப்பட்டு விடும் தானே என்று சொல்வா. அப்படியொரு கோவில் பைத்தியம். அதைப் போல இன்னொரு குடும்பத்திலும் தாய் ஒரே பக்திப் பழம். தியானமெல்லாம் இருப்பா. தகப்பன் பிசினஸ் செய்பவர். பிள்ளைகள் தங்கள் பாடு. இப்போ நான் இப்படி ஆத்மீகமென்று மினக்கெடுகையில் (அதீத ஈடுபாடு கொள்கையில்), அவர்களின் நினைவெல்லாம் வந்து என்னை யோசிக்க வைக்கும். அவர்களைப் பற்றி ஏனையோர் பேசியதெல்லாம் நினைவுக்கு வரும். நானும் அப்படியோ எனச் சிந்திப்பேன்.
வீட்டில் (மீனாட்சி சுந்தரனார் எழுதிய புத்தகமென்று நினைக்கிறேன்) ஒரு சிறிய புத்தகம் இருந்தது. அதில், 'இறைவன் எல்லா உயிர்களையும் உணர்வுகளின் படி நடப்பதற்கே வழிவகுத்திருக்கிறான். மனிதன் தான் அதனைப் பின்பற்றுவதில்லை. எப்போ மனிதன் தன் உணர்வுகளைப் பின்பற்றத் தொடங்குகிறானோ அப்போதே அவனுக்கு வாழ்வில் வெற்றி கிடைக்கும்' என்பது போலப் பல விடயங்கள் எழுதியிருக்கும். அதனை நான் விருப்பத்துடன் படித்து அவற்றைப் பின்பற்ற நினைப்பேன். எப்போதும் நல்ல பிள்ளையாக இருந்து வரவேண்டுமென்றும் எண்ணிய ஞாபகம். ஆனால் வயதுவர பாடசாலையில் விஞ்ஞான பாடத்தில் டார்வினின் கூர்ப்பு என்றெல்லாம் படிக்கத் தொடங்க எனக்கும் மனதில் (உண்மையிலேயே இறைவன் இருக்கிறானா அல்லது டார்வின் சொன்னது போலத் தான் உலகம் தற்செயலாகத் தோன்றியதா என்பவை போன்ற) சிறுசலனங்கள் வந்தது உண்மை. இப்போ எனது பதினேழு வயது மகன் கடவுள் இல்லை என்றெல்லாம் நாஸ்திகம் பேச நாமும் அப்படியொரு கட்டத்தைத் தாண்டி வந்திருக்கிறோமென எண்ணி ஆறுதல் பட முடிகிறது. 
அப்பாவுக்கு சனிதோஷமென்று யாரோ சாஸ்திரம் சொன்னதால் அம்மா சனிக்கிழமைகளில் விரதமிருந்து கோவிலுக்குச் சென்று சனிபகவானுக்கு அர்ச்சனை போடத் தொடங்கியதால் அம்மாவுடன் சேர்ந்து சனிக்கிழமைகளில் கோவிலுக்குச் செல்லும் வழக்கம் வந்தது. அப்போது தான் கவனித்தேன் சனிக்கிழமைகளில் கோவிலில் சனம் குறைவாயிருப்பதால் மனம் ஒருமித்துக் கும்பிட இயலுமாக இருந்தது. அதிலிருந்து சனிக்கிழமைகளில் கோவிலுக்குச் செல்லும் விருப்பம் வந்தது. அதற்கும் யாரோ விஷேச நாட்களில் சாமி கும்பிட்டால் தான் பலன் உண்டு என்றார்கள். எனக்கு என்னவோ விஷேச நாட்களில் கோவிலுக்குச் சென்று அங்கே பத்தும் பலதும் பேசுவதை விட சனமில்லாத நாட்களில் சென்று மனம் ஒன்றி சாமி கும்பிடுவது பிடித்திருந்தது. 
மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை மூன்றும் கூடாது என்று சமயப்பாடத்தில் என்று நினைக்கிறேன் படித்ததன் பின் நகைகளில் ஆசை வைக்கக் கூடாது என்று நினைத்ததனாலோ அல்லது இயற்கையாகவே எனக்கு நகைகளில் ஆசையில்லாமல் போய் விட்டதோ பெரும்பாலும் படித்ததனால் என்றே நினைக்கிறேன், எனக்கு நகைகளில் ஆசையில்லை. காணிகளில் ஆசை வைக்கக்கூடாது. நான் பெண் என்பதால் பெண்ணாசையைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்று நினைத்த ஞாபகம். சிறிய வயதில் அதனால் ஒரு பிரச்சனையும் வரவில்லை. பாதுகாப்புக் காரணங்களுக்காகவோ பாடசாலையில் நகைகள் போடக் கூடாதென்றதாலோ என்னவோ நாம் வீட்டில் தோடு மோதிரம் தவிரப் பெரிதாக நகைகள் போடுவதில்லை. ஆனால் பெரிய பிள்ளையான பின் முதன்முதலாகக் கோவிலுக்குக் கூட்டிக் கொண்டு செல்வதற்காக நகைகளைப் போடச் சொல்லத்தான் பெரிய பிரச்சனையாகி விட்டது. எனக்கு ஞாபகமாயிருக்கிறது பக்கத்து வீட்டு அன்ரி வந்து என்னைக் கெஞ்சிக்கூத்தாடி ஒன்றோ இரண்டோ நகைகள் போடவைத்த ஞாபகம். அதன்பின் அது ஒரு பெரிய பிரச்சனையாகி விட்டது. அவர்களுக்குப் பொன்னாசை, மண்ணாசை என்று விளங்கப்படுத்த முடியுமாவென்று எண்ணி எனக்கு நகைகளில் ஆசையில்லை என்று பொதுவாகச் சொல்லி வைத்தேன். ஆனால் திருமணம் முடித்தபின் மாமியார் நகைகளைப் போடச் சொல்கையில் தட்ட முடியாமல் போட்டு அம்மாவின் "ஓ எங்களிடம் தான் வாலாட்டல் எல்லாம்" என்ற கிண்டலைக் கேட்டேன். 
சிறிய வயதில் பக்கத்து வீட்டில் யாரோ சொந்தக்காரர்கள் வந்திருந்தார்கள். வழக்கம் போல ஏதாவது விசேஷமான உணவு செய்தால் அம்மா அவர்களுக்குக் கொடுத்து விடுவது போல அன்றும் என்னிடம் தந்து கொடுக்கச் சொன்னதால் அங்கு சென்றிருந்தேன். அவர்கள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களெல்லோரும் ஹாலில் இருந்து பேசிக்கொண்டிருந்தார்கள். என்னைக் கண்டதும் வந்திருந்த சொந்தக்கார அக்கா எமது தேவாரத்தைப் பகிடி பண்ணிப் பாடினா. அதைக் கண்ட மற்றவர்களும் மற்றத் தேவாரங்களைப் பகிடி பண்ணிப் பாடினார்கள். எனக்கு அப்பொழுது எட்டு, ஒன்பது வயதிருக்கலாம். அவர்களெல்லோரும் பெரியவர்கள். அப்போ எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இப்போ அந்தச் சம்பவத்தை எண்ணுகையில் ஒரு சிறிய பிள்ளைக்கு ஏழோ எட்டுப் பெரியவர்கள் இப்படிச் செய்ததையும் அப்போ அவர்களின் மனநிலையையும் நினைத்துப் பார்க்கிறேன். அவர்களுக்கு அதனால் என்ன ஆத்மீக முன்னேற்றம் வந்ததென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனக்கு அதனால் எனது சமயத்தில் இன்னும் கூடுதலான பற்றுதல் வந்தது உண்மை. 
இந்த நேரத்தில் எனக்கு இன்னுமொரு நிகழ்வு ஞாபகம் வருகிறது. எங்கள் வீட்டில் வெள்ளிக்கிழமைகளில் மாலை ஆறுமணிக்கு முகம் கழுவி, சாமி கும்புடுகையில் தேவாரம் பாடும் வழக்கம். சில குறிப்பிட்ட பாடல்கள் வழக்கமாகப் பாடப்படும். அதில் ஒரு புராணத்தில் 'மறுசமயங்கள் மாளப் பேதகம் செய்வாய் போற்றி' என்று வரும். அந்த வசனம் வந்ததும் நான் பாடாமல் மௌனமாக நின்று விட்டுப் பின் மிகுதியைப் பாடுவேன். அதை ஏனையோர் கவனித்து விட்டதனாலோ அல்லது நான் அதைப்பற்றிச் சொன்னேனோ என்று நினைவில்லை அப்படிப் பாடுவது எனக்குச் சரியாகத் தோன்றவில்லை என்று வீட்டிலுள்ளவர்களுக்குத் தெரிந்து விட்டது. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக அந்தப்பாடலை விட்டுவிட்டார்கள். முதலில் சொன்ன நிகழ்ச்சி முதலில் நடந்ததா அல்லது இந்த நிகழ்ச்சி முதலில் நடந்ததா என்று எனக்கு நினைவில்லை. இப்போ நினைக்கையில் ஒரு வேளை அப்படி நடந்ததால் தான் ஒவ்வொருவருக்கும் தன்தன் சமயநம்பிக்கைகள் பெரிது தானே என்று எனக்குள் ஒரு விழிப்புணர்வு வந்து தான் அப்படிச் செய்தேனோ என எண்ணுகிறேன்.
சிறிய வயதிலிருந்தே கதைப்புத்தகங்களோடு சமயசம்பந்தமான புத்தகங்கள் மற்றையது வாழ்க்கையைப் பற்றிய அறிவுரைகளுள்ள புத்தகங்கள் வாசிக்கும் வழக்கம் வந்துவிட்டது. எனக்கு ஞாபகமாக உள்ளது இப்போதும் எனக்கு மூட் அவுட் வந்தால் உடனே பகவத்கீதையை எடுத்து வாசிக்கத் தொடங்கி விடுவேன். இப்படித் தான் ஒருதரம் அம்மா எதுக்கோ பேசியதனால் மூட் அவுட்டாகி பகவத்கீதையை எடுத்து வாசிக்க தங்கையொருத்தி போய் அம்மாவிடம் சொல்ல அம்மா கூப்பிட்டு "இப்ப என்ன நடந்ததென்று பகவத்கீதையை வாசிக்கிறாய்?" என்று கேட்டது ஞாபகமிருக்கிறது. இந்தப் பழக்கத்தில் கம்பஸ் போன பிறகும் அங்கே கோவிலில் இருக்கும் லைப்ரரியில் 'கர்மகாண்டம்' என்ற புத்தகத்தை வாசித்தேன். சின்ன வயதில் அப்படியான புத்தகங்கள் வாசித்துவிட்டு அதன்படி ஒழுகவேண்டுமென எண்ணி நடப்பதுண்டு. கர்மகாண்டம் வாசித்த பின்னர் அதன்படி ஒழுகுவதைப் பற்றித் தீவிரமாக யோசித்து ஓரளவு நடந்தும் இருக்கிறேன்.
மிகச்சிறிய வயதில் தமிழ், சமயப் பாடங்களிலோ அன்றி நான் வாசித்த புத்தகங்களிலோ கற்புக்கரசிகளைப் பற்றிப் படிக்கும் போது நாமும் அப்படி இருக்க வேண்டுமென எண்ணியது நினைவுள்ளது. அதாவது திருவள்ளுவரின் மனைவி வாசுகியின் கற்பால் துலா நில்லென்று சொன்ன இடத்திலேயே நின்றதாம், யமனோடு போராடிக் கணவனின் உயிரை சாவித்திரி வென்றெடுத்தாளாம், மற்றும் வசிஷ்டரின் மனைவி அருந்ததியின் கற்புப் பற்றியெல்லாம் படிக்கையில் நாமும் அப்படியே இருக்க வேண்டுமென எண்ணியதுண்டு. ஆனால் பிற்பாடு ஆனந்தவிகடன் போன்ற புத்தகங்கள் வாசிக்கத் தொடங்கிய பிற்பாடு அதில் வரும் பெண்ணுரிமை சம்பந்தமான விடயங்களைப்  படித்ததனால் பெண்ணுரிமைவாதியாக மாறியதுமுண்டு. எனவே எனக்குள் இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒருத்தி வாசுகி, அருந்ததியைப் போன்றவள். மற்றையவள் பெண்ணுரிமைவாதி. இரண்டுக்குமிடையில் நான்.
எழுபதுகளில் தான் சாயிபாபாவைப் பற்றி எங்கள் சிறிய டவுனுக்குத் தெரிய வந்திருக்குமென நினைக்கிறேன். அந்த நேரத்தில் தான் இப்படியொரு ஆள் அதிசயம் செய்கிறாராம் எனத் தெரியவர அப்பாவின் முகத்தைப் பார்த்தேன். அவர் 'அது சித்து விளையாட்டாக' இருக்கும் என்றார். யோகர் சுவாமியின் பக்தனாகிய அவருக்கு அது ஒன்றும் பெரிய விஷயமாகப் படவில்லையோ அல்லது அவருக்கு அப்பொழுது சாயியை நம்பும் நேரம் வரவில்லையோ அவர் அப்படிச் சொன்னதும் நான் சித்து விளையாட்டென்றால் என்னவென்று தெரியாமலேயே பாபாவின் விடயத்தைப் பின்னுக்குப் போட்டு விட்டேன். எங்கள் குடும்பத்துக்குத் தான் அப்போ பலனில்லை. ஆனால் அயலிலிருந்த பல குடும்பங்கள் பாபா நம்பிக்கையில் பஜனை நடத்துவார்கள். நாம் போகமாட்டோம். ஆனால் எனது சிறிய அண்ணா மட்டும் செல்வார். அவருக்கு மட்டும் தான் அந்த நேரம் பாபா நம்பிக்கை வந்திருந்தது. அயலுக்குள் நடந்த பஜனைகளுக்குச் செல்லாமல் கனடா வந்த பின் கனடாவின் வின்ரர் குளிருக்குள் பஸ், மெட்ரோ எல்லாம் ஏறிக்கஷ்டப்பட்டு பஜனைக்குச் சென்றிருக்க அயலுக்குள் கேட்ட அதே பஜனைப் பாடலைக் கேட்டால் எப்படியிருக்கும்? கண்ணெல்லாம் கலங்கி 'கடவுளே பக்கத்தில், அயலுக்குள் பஜனை நடக்கையில் செல்லாமல், இங்கே இந்தக் குளிருக்குள் இப்படிக் கஷ்டப்பட்டு வந்து இருந்து பஜனையைக் கேட்க வேண்டியிருக்கிறதே' என்பதை எண்ணியெண்ணி மனம் அங்கலாய்க்கக் கண்ணெல்லாம் கலங்கி நெக்குருகி நெகிழ, மகள் "அம்மா அழாதேங்கோ" எனப் பயந்து போய்ச் சொல்ல அது வேறு கதை.
ஆனால் அப்போவெல்லாம் எனது சிறிய அண்ணா அடிக்கடி பாபாவின் முக்கியமாக சீரடிபாபாவின் பெருமையைப் பற்றியெல்லாம் சொல்வார். யாரோ ஒருவருக்கு சீரடிபாபா நேரடியாக வந்து அருள் செய்த கதையெல்லாம் சொல்வார். எனக்குத் தான் அப்போ காலம் வரவில்லை நம்புவதற்கு. கம்பஸில் எனது பக்கத்து அறையிலிருந்த ஒரு சாயி பக்தை சாயிபாபாவின் ஒரு புத்தகத்தைத் தந்து வாசிக்கச் சொன்னாள். நானும் வாசித்தேன். அப்போது கூட பாபா நல்ல விஷயங்களைச் சொல்லி இருக்கிறார்; அதாவது சாதாரண மக்களாகிய எமக்கு வழிபடுவதற்கு ஒரு ரூபமும் ஒரு நாமமும் தேவை. அது கிருஷ்ணராக இருந்தாலென்ன கிறிஸ்துவாக இருந்தாலென்ன என்பது போன்ற பல நல்ல விஷயங்களை அதில் வாசித்தேன். அவர் தன்னை வணங்கும் படி ஒரு இடமும் சொல்லவில்லை. அதை வாசித்த பின்னரும் கூட அவரை ஒரு சமயப் பெரியாரென்ற அளவில் தான் வைக்கத் தோன்றியதே அன்றி அவரைக் கடவுளாக எண்ணத் தோன்றவில்லை. அதற்குக் காலம் வரவில்லை. ஆனால் நல்ல காலம் நான் கனடா வருவதற்கு முன்னர் எனக்கு அவரில் நம்பிக்கை வந்துவிட்டது. எப்படி நம்பிக்கை வந்தது என்பது பெரிய கதை. நானும் மகளும் கனடா வருவதற்கு இமிக்ரேஷன் அலுவலுக்காக வந்து அப்பாவின் சேகிற் பங்களாவில் தங்கியிருப்பது வழக்கம். அதில் அப்பாவின் உபயோகத்துக்கு ஒரு அறை உள்ளது. மற்றைய அறையில் ஒருவரும் இல்லையென்றால் அதையும் நாங்கள் உபயோகிப்போம். அங்கே ஆனந்தவிகடன் போன்ற பல புத்தகங்கள் இருக்கும். எல்லாப் புத்தகத்தையும் வாசித்துவிட்டேன். வேறு புத்தகமொன்றுமில்லை (பாபாவைப் பற்றி ஒரு அவுஸ்திரேலியர் எழுதிய 'சாயிபாபா அவதார்'  என்ற ஆங்கிலப் புத்தகத்தைத் தவிர). அது எங்கள் சின்னத்தானின் புத்தகம். அவருக்கும் பாபாவில் நம்பிக்கையுள்ளது. நான் எந்தப் புத்தகத்தை வாசித்தாலும் அதை மட்டும் வாசிக்கமாட்டேன். அதற்கு காலம் இன்னும் வரவில்லையாக்கும்.
கனேடியன் எம்பஸியிலிருந்து எமக்கு இலங்கையில் பிரச்சனை ஒன்றுமில்லை என்பதால் எமது ஸ்பொன்ஸரைத் தள்ளிப் போடுவதாகக் கடிதம் வந்தது. இவர் கனடாவிலிருந்து என்னையும் மகளையும் ஸ்பெஷல் மினிஸ்ட்ரி பெர்மிட்டில் எடுப்பதற்குத் தான் முயற்சித்தார் (தனக்கு லாண்டெட் இமிகிரண்ட் கிடைக்காததால்). அதற்குத் தான் அவர்கள் அப்படிப் பதில் அனுப்பியிருந்தார்கள். இனி இவருக்கு லாண்டெட் இமிக்ரென்ட் அந்தஸ்து கிடைத்த பின்னர் தான் நாமிருவரும் கனடா செல்லமுடியும். மூட் அப்ஸட்டாகி அடுத்த ரூமில் போய்ப் படுத்திருக்கையில் என் கை என்னையறியாமல் பாபாவைப் பற்றிய அந்தப் புத்தகத்தை எடுத்தது. அது ஹோவர்ட் மர்பெஃட் (Howard Murphet) என்ற ஒரு அவுஸ்திரேலியர் எழுதிய புத்தகமாகும். அன்று ஒரு வியாழக்கிழமை என்று எனக்குத் தெரியாது. அப்புத்தகத்தை வாசிக்க வாசிக்க ஒரே வியப்பாக இருந்தது. இவ்வளவு அற்புதங்கள் செய்திருக்கிறாரா என வியந்தேன். நாம் ஆன்மீகச் சாதகங்கள் செய்து ஆன்மீக முன்னேற்றம் அடைந்து கொண்டு வருகையில் ஒரு கட்டத்தில் எமக்கு சில சித்திகள் கைவரும். அவற்றை நாம் உபயோகித்தால் எமது ஆன்மீகச் சக்திகள் வீணடிக்கப்பட்டு விடும். அப்படிப்பட்ட சித்திகளைத்தான் சித்து விளையாட்டென்று சொல்வதென்று இப்போ தெரியும். அப்படிப்பட்ட சித்திகளை உபயோகித்து அற்புதங்கள் செய்தால் அவர்களின் சக்தி வீணடிக்கப்பட்டு விடும். மீண்டும் அவர்கள் தவம் செய்து அந்தச் சக்தியைப் பெற வேண்டும். ஆனால் பாபா சிறிய வயதில் இருந்தே பலப்பல அற்புதங்கள் செய்து கொண்டிருக்கிறார். இன்னும் கூடச் செய்கிறார் என்றால் அவர் கடவுளின் அவதாரம் தான் என விளங்கியது. அப்படியே எனக்குள் பெரிய மாற்றம் ஏற்பட்டது. பாடசாலையில் இந்து சமயம் ஒரு பாடமாக இருக்கையில் சைவ சித்தாந்தம் எனக்கு விருப்பமான பகுதி. எப்படி ஆத்மா இறைவனை அடைவது, பதி, பசு, பாசம், எல்லாவற்றையும் நன்றாக விரும்பிப் படிப்பேன். தவம் செய்யும் முனிவர்களுக்கு ஒரு கட்டத்தில் அட்டமா சித்திகள் என்று சொல்லப்படுகின்ற எட்டு வகைத் சித்திகள் சித்திக்கும் எனப் படித்திருக்கிறேன். சில நினைவிலும் உள்ளன. அதாவது அணிமா, கரிமா, லகிமா,மஹிமா என எட்டு வகை. இவைகளின் அர்த்தங்கள் இப்போ நினைவில் இல்லை. ஆனால் அவை தான் சித்து விளையாட்டென்று அப்பா சொன்னவை. முனிவர்கள் தவம் செய்து பெறும் சித்திகள். பாபாவுக்குச் சிறிய வயதிலிருந்தே இருந்திருக்கிறது. அப்படியென்றால் பாபா கடவுள் தானே. அன்று ஒரு வியாழக்கிழமை. அதாவது பாபாவின் நாள். அன்று தான் பாபா என்னை ஆகர்ஷிக்கத் தேர்ந்தெடுத்த நாள். அப்படியே ஆகர்ஷிக்கப்பட்டேன். வியாழக்கிழமை பாபாவின் நாளென்பது சாயிபக்தையான எங்கள் பெரியம்மா மூலம் எங்களுக்கு முதலே தெரியும். அதீத சாயிபக்தையான எங்கள் பெரியம்மா தனக்கு என்ன நன்மை நடந்தாலும் அது வியாழக் கிழமைகளில் தான் நடக்கும் என்று சொல்பவர். அவர் பாபாக்காக வியாழக்கிழமைகளில் மரக்கறியாக இருந்து பின்னர் வெள்ளிக்கிழமை மச்சம் உண்பதை நாங்கள் பாபாவில் நம்பிக்கை வர முன்னர் பகிடி பண்ணியும் இருக்கிறோம். இப்போ நானே சிலசமயம் அப்படிச் செய்கிறேன்.    
அப்போ பாபாவின் படம் வாங்கவென்று நுகேகொடவில் இருந்த கடைகளுக்குச் சென்றேன். அங்கே ஒரு பெட்டிக்கடை; பாபாவின் படங்களுக்காக மட்டுமே வைக்கப்பட்டிருந்த மாதிரி இருந்தது. அதில் பாபாவின் படங்கள் மட்டுமே இருந்தன. சிங்களவர்களிலும் நிறைய பாபா பக்தர்கள் இருக்கிறார்களென்று எனக்குத் தெரியாது அப்போ. ஆசைதீர ஒரு பாபாவின் படத்தைத் தெரிந்தெடுத்துக் கொண்டு நுகேகொடவில் இருந்த அப்பாவின் சேகிற் பங்களாவிற்கு (அங்கே தான் நானும் மகளும் அப்பா, அம்மாவுடன் தங்கியிருந்தது) திரும்பினால், அப்பாவிற்குப் பிடிக்கிறதோ தெரியாது என்பதால் சாமித்தட்டில் (சேகிட் பங்களாவில் ஒரு அறைதான் அப்பாவின் உபயோகத்துக்கென்று ஒதுக்கப்பட்டு இருந்ததால் சுவர் அலுமாரியொன்றின் மேல் தட்டிலேயே சாமிப்படங்களை அம்மா வைத்திருந்தா) ஒரு மூலையில் அப்பாவின் கண்ணுக்குப் படாதவிடத்தில் தான் பாபா படத்தை வைத்தேன். அம்மாவிற்கும் வேறொரு சந்தர்ப்பத்தில் பாபாவில் நம்பிக்கை வந்திருந்தது. அதனால் அம்மாவிற்கு மட்டும் சொல்லியிருந்தேன். அடுத்த கிழமை எனது தங்கைமார் இருவர் கொழும்புக்கு ஏதோ அலுவலுக்கு வந்த பொழுது சாமி விளக்குக் கொழுத்தும் பொழுது நடுவே இருந்த சிவன் உமையின் படம் (கலண்டரில் வந்த படத்தையே அம்மா வெட்டி வைத்திருந்தா) தற்செயலாக விளக்கில் விழுந்து சாதுவாக எரிந்துவிட்டதாம். அதை அம்மா சகுனப்பிழையென்று எண்ணிப் பயந்தாலுமென்று தங்கையிருவரும் பாபாவின் படத்தை அந்த இடத்தில் வைத்து சிவன் படத்தை மறைத்து விட்டார்கள். எனக்கு இது தெரியாது. நான் மறுநாள் பார்க்கையில் பாபாவின் படம் முன்னே இருந்தது. ஒன்றும் சொல்லாமல் இருந்து விட்டேன். பின்னர் தான் என்ன நடந்ததென்று தங்கைமார் சொன்னார்கள். கடவுளேயென்று அப்பாவும் அதற்கு ஒன்றும் சொல்லவில்லை.
இவருக்கு 'லாண்டட் இமிக்ரண்ட்' அந்தஸ்து கிடைக்கச் சிறிது நாட்கள் எடுக்கலாம் என்பதாலும் தனிய ஒரு அறையில் மகளை வைத்துப் பார்ப்பது (ஐந்து வயது) கஷ்டமென்பதாலும் நானும் மகளும் மட்டக்கிளப்புக்குப் புறப்பட்டோம். அங்கு சென்ற பின் குளித்து, உடை மாற்றி, வந்து சாமி கும்பிட சாமியறைக்கு வந்தால் சாமி கும்பிட மனம் வரவில்லை. நாம் வழக்கமாகக் கும்பிடும் முருகன், சிவன் படங்களெல்லாம் இருந்தன. ஆனால் எல்லாவற்றுக்கும் உயிரில்லாதது மாதிரி வெறும் உடல் மட்டுமே உள்ளது மாதிரி இருந்தது. எனக்கு நேர மூத்த அண்ணா முந்தி வைத்துக் கும்பிட்ட பாபாவின் சிறிய ஒரு படம் இங்கே தானே இருக்கும் என்று சாமிப் படங்களையெல்லாம் விலத்திப் பார்த்தேன். நான் தேடிய அப்படம் ஒரு சாமிப்படத்துக்குப் பின்னால் ஒளித்துக் கொண்டிருந்தது. வெறும் மட்டையில் ஒட்டப்பட்டிருந்த அப்படத்தை எடுத்து முன்னால் வைத்தேன். அப்போ தான் எல்லாப் படத்துக்கும் உயிர் வந்தது மாதிரி இருந்தது.    
இவைகளுக்கு எல்லாம் முன்னர் நிகழ்ந்த சில ஆன்மீக அனுபவங்களையும் எழுத விரும்புகிறேன். ஒன்று நான் கம்பஸ் போவதற்கு முன் நிகழ்ந்தது. பண்டாரவளையிலிருந்து அப்பா மாற்றலாகி மீண்டும் மட்டுநகருக்கு வந்து சிறிது நாள். அப்போ அப்பாவுக்கு யாரோ கொடுத்த ஒரு புத்தகம். பெயர் 'கைலாயம் கண்டேன்'. ஒரு ஸ்வாமியார் எழுதியதென்று ஞாபகம். அவரின் பெயர் சச்சிதானந்த ஸ்வாமியென்று நினைக்கிறேன். நிச்சயமில்லை. அந்த ஸ்வாமியார் வேறும் பலருடன் சேர்ந்து கைலையங்கிரிக்கு சென்று வந்ததைப் படங்களுடன் விலாவாரியாக எழுதி ஒரு புத்தகமாக வெளியிட்டிருந்தார். அதை வாசிக்க வாசிக்க நானும் அவருடன் சேர்ந்து செல்வதாக உணர்ந்தேன். போகும் வழியில் அவர் பட்ட கஷ்டங்கள், பனிப்பாறையில் சிலர் சறுக்கி விழுந்தமை எல்லாமே வாசித்தறிந்தேன். அதனை வாசிக்க வாசிக்க அவர்களுடன் சேர்ந்து நானும் கைலாயம் ஏறுவதைப் போல உணர்ந்தேன். மானசரோவர் பொய்கையில் நீராடியதெல்லாம் வாசிக்கையில் நானும் சேர்ந்து அந்தக் குளிரில் நீராடுவதைப் போல உணர்ந்தேன். கடைசியில் கைலை மலையில் அவர்கள் போய் நிற்கையில் நானும் அவர்களுடன் போய் நிற்பதாக நினைத்து எனக்கு நெக்குருகி மெய் சிலிர்த்தது. அந்த இடத்தில் ஆத்மார்த்தமாக நானும் அவர்களுடன் கைலைமலையில் நின்றிருந்தேன்.
இதே போல இன்னொரு அனுபவமும் உள்ளது. இந்தியாவிலுள்ள ஒரு கோவிலுக்கு அஸ்திவாரம் போடுவதற்கு 'ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்' என்ற மந்திரத்தை 108 தரம் எழுதியனுப்பினால் அவர்கள் அக்காகிதங்களை அஸ்திவாரம் கட்டுமிடத்தில் வைப்பார்கள் என்றும் அது எங்களுக்கு நன்மை பயக்குமென்றும் அம்மாவுக்கு யாரோ சொன்னதால் அம்மா எங்களை எழுதச்சொன்னார்கள். நாங்களும் எழுதிக்கொண்டிருந்தோம். ஒரு நாள் நான் தனியே பின் கராஜுக்குள் உள்ள மேசையிலிருந்து எழுதிக்கொண்டிருக்கும் போது கராஜின் திறந்திருந்த கதவால் ஒரு பாம்பு உள்ளே எகிறிக் குதித்து சுவரில் வழுக்கிக் கீழே விழுந்து வழுக்கிக் கொண்டு அப்படியே மறுபக்கக் கதவால் வெளியேறி விட்டது. கண்மூடிக் கண்திறப்பதற்குள் நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சி என்னை வியப்பிலாழ்த்தி விட்டது. பிற்காலத்தில் இந்த விஷயத்தை தெரிந்த ஒருவருக்குச் சொன்ன போது அவர் சொன்னார் அது நிச்சயமாக ஒரு ஆன்மீக அனுபவம் தான் என்று. அதாவது விஷ்ணு ஆசீர்வதிக்க வந்துள்ளார் என்று சொன்னார்.
ஆனால் இவையெல்லாவற்றையும் மிஞ்சும் ஒரு அனுபவம் உள்ளது. அதுவும் கராஜுக்குள் தான் ஏற்பட்டது. ஒரு நாள் அந்தி சாயும் நேரம் நான் கராஜுக்குள் தனியே இருந்து புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தேன் என நினைக்கிறேன். எனக்குத் திடீரென்று 'நான் யார் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன்' என்ற எண்ணம் தோன்றி விட்டது. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பயம் வந்து விட்டது. உடனே அந்த இடத்தை விட்டு எழுந்து விட்டேன். திடீரென்று ஒரு இருபது இருபத்திரண்டு வயதுப் பிள்ளைக்கு உள்மனதுள் 'நான் யார் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன்' என்ற எண்ணம் வந்தால் எப்படியிருக்கும்? இப்போ நினைக்கையில் அது ஒரு ஆத்மீக உணர்வு என்று தெரிகிறது. ஆனால் அந்த வயதில் அது எனக்குப் பயத்தைத் தந்ததில் ஆச்சரியமில்லை. அதன் பின் அப்படித் தனிமையில் இருப்பதைத் தவிர்த்த ஞாபகம். அப்போ எனக்கு லூஸோ என்று கூட நினைத்த ஞாபகம்.

No comments:

Post a Comment