OURS IS NOT A BETTER WAY, OURS IS MERELY ANOTHER WAY - From: Friendship with God
எமது வழிதான் சிறந்ததென்பதல்ல, இதுவும்கூட இன்னொருவழி அவ்வளவுதான்
-தமிழாக்கம்

Friday, August 19, 2022

நான்காவது பாகம்

வாழ்க்கை ஓரளவு சுமுகமாகச் சென்று கொண்டிருந்தது. இதற்கிடையில் மகள் கருவுற்றாள். திருமணம் முடிந்து நான்கு வருடங்களின் பின்னரே மகள் கருவுற்றதால் சுகமாகப் பிள்ளை பிறக்கும் வரை நீ தான் துணை என ஆண்டவனை வேண்டினேன். துவாபர யுகத்தில் கிருஷ்ணர் அஸ்வத்தாமனின் கணையிலிருந்து அபிமன்யுவின் மகனைக் கருவிலேயே சென்று காத்த கதையெல்லாம் நினைவுக்கு வந்து இப்போ பாபாவாகப் பிறந்திருக்கும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டினேன். வாழ்க்கையின் அடுத்த கட்டம் தொடங்கும் அறிகுறி தென்பட்டது. அந்த மகிழ்ச்சியில் சிறிது நாட்களே திளைத்திருந்தோம். மகிழ்ச்சியென்பது இரு துன்பங்களுக்கிடையேயான இடைவெளி என்று எங்கோ படித்த ஞாபகம். கணவரின் உடல் நிலையில் சிறு மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. உடல் மெலிந்ததுடன் வயிற்றில் ஒரு நோ. மருத்துவர் எண்டோஸ்க்கோப்பி (endoscopy) எனப்படும் வயிற்றுள் குழாய் விட்டுப் பார்க்கும் பரிசோதனை செய்யவேண்டும் என்றார். வைத்தியசாலையில் பரிசோதனைக்காகக் கணவரை உள்ளே அனுப்பிவிட்டு நான் வெளியில் இருந்து கொண்டிருந்தேன். பரிசோதனை முடிந்ததும் அதனைச் செய்த பெண் டாக்டரே வந்து என்னை உள்ளே அழைத்துச் சென்றார். அப்பரிசோதனை செய்வதற்கு மயக்கித்தான் செய்வதென்பதால் கணவர் இன்னமும் அரை மயக்க நிலையில் படுத்திருந்தார். டாக்டர் என்னிடம் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். அதாவது என் கணவரின் வயிற்றில் ஒரு கட்டி இருப்பதாகச் சொன்னார். கணவருக்கும் முதலிலேயே சொல்லிவிட்டார். ஆனால் அவர் அரைமயக்க நிலையில் இருந்ததால் இன்னொரு குடும்ப அங்கத்தினருக்கு அதனைத் தெரியப்படுத்த வேண்டுமென்பதாலேயே என்னை உள்ளே அழைத்து எனக்கும் அதனைத் தெரியப்படுத்தினார் என எண்ணுகிறேன். நான் கொஞ்சமும் எதிர்பாராத செய்தியென்பதால் எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் டாக்டரையே அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டு நின்றேன். டாக்டர் சொன்னார் தான் வயிற்றின் உள்ளே உள்ள கட்டியைச் சில படங்கள் எடுத்ததாகவும் நான் அவற்றைப் பார்க்கப் போகிறேனா என்றும் கேட்டார். நான் இன்னும் அதிர்ச்சியிலிருந்து விடுபடாமல் டாக்டரையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றேன். அவர் மீண்டும் பார்க்கப் போகிறேனா எனக்கேட்டு விட்டு நான் சம்மதம் சொன்னது போல் என்னை அழைத்துச் சென்றார். எனக்கு அவற்றைக் காட்டினார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. அதன் பின் என்னைக் கணவருக்கு அருகில் சற்றுநேரம் இருக்கச் சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார். வழமையாக இப்படியான பரிசோதனைகள் முடிய 'எல்லாம் சரியாகவே உள்ளது' என்பது போன்ற வார்த்தைகளையே கேட்டுப் பழகியதால், அதையே இந்தத் தரமும் எதிர்பார்த்திருந்த எனக்கு இச் செய்தி பேரிடியாக இருந்தது. வயிற்றுக்குள் இருக்கும் கட்டியின் ஒரு சிறு பகுதியை டாக்டர் பையோப்ஸி (biopsy) எனப்படும் திசுக்கள் பரிசோதனைக்கு அனுப்புவதற்காக எடுத்ததாகவும் சொல்லியிருந்தார். என்ன தான் பரிசோதனை முடிவு வரும் வரை ஒன்றும் சொல்ல இயலாதெனினும் இப்படியான கட்டிகள் இருப்பது அவ்வளவு நல்லதல்ல என்று தெரியுமாதலால் மனம் பயத்தில் ஆழ்ந்தது. அரைமயக்க நிலையிலும் கணவருக்கு விஷயத்தின் தீவிரம் விளங்கியதால் இருவரும்  ஒருவரையொருவர் என்ன செய்வதென்று தெரியாமற் பார்த்துக் கொண்டிருந்தோம். கணவருக்கு ஒருவாறு மயக்கம் முழுவதுமாகத் தெளிந்தது. வீட்டுக்குப் புறப்பட்டோம். வீட்டில் பிள்ளைகளுக்கு இந்தச் செய்தி பேரிடியாக இருந்தது. 

வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது. 'ஸ்பெஷலிஸ்ட்' எனப்படும் நிபுணத்துவம் வாய்ந்த இரு டாக்டர்களிடம் அந்தப் பெண் டாக்டரே கணவருக்கு 'அப்பொய்ன்மெண்ட்' (சந்திப்பிற்கான நியமனம்) வைத்துள்ளதாக ஆஸ்பத்திரியில் இருந்து அழைத்துச் சொன்னார்கள். ஒருவர் 'சர்ஜன்' எனப்படும் அறுவைச் சிகிச்சை நிபுணர். மற்றவர் புற்றுநோய் மருத்துவர் (ஒங்கோலொஜிஸ்ட்). சர்ஜன் கணவரின் வயிற்றை அழுத்திப் பார்த்து விட்டுச் சில பரிசோதனைகள் செய்ய எழுதினார். அவர் அறுவைச் சிகிச்சை மூலம் கட்டிகளை அகற்றுபவர். கீமோத்தெரப்பி (chemotherapy) செய்து அந்தக் கட்டியைச் சிறிதாக்கினால் பின்னர் தான் அறுவைச் சிகிச்சை மூலம் அதனை அகற்றி விடலாம் என்றே அந்த சேர்ஜன் ஆரம்பத்தில் சொல்லியிருந்தார். ஆனால் ஸீ ரீ ஸ்கேன் (CT scan) பரிசோதனை முடிவுகளில் இருந்து வயிற்றில் இரைப்பைக்கு அருகில் இருக்கும் கொழுப்புப் பகுதிக்கும் நோய் பரவியுள்ளதால் வெட்டி எடுப்பதில் அர்த்தமில்லை என்றார்கள். 

 ஆனால் பயோப்ஸி எனப்படும் திசுக்களின் பரிசோதனை முடிவுகள் வரமுன் ஏன் புற்றுநோய் மருத்துவரைச் சந்திக்கச் சொல்கிறார்கள் என்பது விளங்காமலேயே அவரைச் சந்திக்கச் சென்றோம். இப்படியான கட்டிகள் பெரும்பாலும் புற்றுநோய்க் கட்டிகளாகவே இருக்கும் என்பதாலேயே அப்படிச் செய்துள்ளார்கள் என்பது பின்னர் தான் தெரிய வந்தது. திசுப் பரிசோதனை முடிவும் அறுவைச் சிகிச்சை நிபுணர் செய்யச் சொன்ன பரிசோதனைகளின் முடிவும் வந்து அது புற்றுக் கட்டி தானென உறுதியாகியது. இடிக்கு மேல் இடி.

புற்றுநோய் மருத்துவரைக் (oncologist) காணச் சென்றோம். 1990களில் நானும் மகளும் கனடாவுக்கு ஸ்பொன்சரில் வருவதற்கு முன் கணவருடன் ஒன்றாகப் படித்த தூரத்து உறவுமுறையான ஒருவருக்கு இதே வருத்தம் வந்ததால் அவர் டாக்டரிடம் செல்கையில் அவருடன் உதவிக்கும் அவருக்கு  மொழி பெயர்ப்பதற்கும் கணவரே அவருடன் சென்று வந்ததாக என்னிடம் முன்பே சொல்லியுள்ளார். அதனால் இவருக்கு இந்நோயைப் பற்றி ஓரளவு தெரியும். கீமோத்தெரபி செய்தால் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றியெல்லாம் தெரியும். எனவே கீமோத்தெரபியை இயன்ற அளவு தவிர்ப்பதெனக் கணவர் தீர்மானித்தார். அப்பாவிற்கு இப்படி என்றறிந்தவுடன் மகள் இன்டர்நெட்டில் எல்லாம் ஆராய்ச்சி செய்து வேறு பல வழிகளில் இவ்வருத்தத்தை மாற்றிய விதங்கள் எல்லாம் ஆராய்ந்து அவ்வழிகளில் முயற்சி செய்வதென முடிவு செய்திருந்தோம். எனவே புற்றுநோய் மருத்துவரிடம் சென்றபொழுது இப்போ கீமோதெரபி செய்யும் எண்ணம் இல்லை என்று சொன்ன பொழுது அவர் அதை ஏற்றுக் கொண்டார்.  

தாள முடியாத துன்பம் வரும் வேளைகளில் மனித மனம் இயல்பாகவே இறைவனை நாடுவது வழமை தானே. அதுவும் நான் சும்மா அம்மா பேசியதற்கே கீதை வாசித்தவள். கேட்கவா வேண்டும். இப்போ பாபா பக்தை வேறு. சத்யசாயி பாபாவினதும் ஷீர்டி பாபாவினதும் பெரிய படங்கள் இரண்டு ஒரு சகோதரர் லேமினேட் செய்து தந்தவை இருந்தன. அவற்றை சுவற்றில் ஒட்டிவிட்டு நான் அவற்றுக்கு முன் இருந்து ஒவ்வொரு நாளும் பஜனை செய்யத் தொடங்கினேன். முதலில் பாபாவின் அஷ்டோத்ர சதநாமாவளி (108 நாமாவளி) சொன்னபின் பஜனைப் பாடல்கள் நானே ஒருத்தியாக இருந்து பாடுவேன். கனடாவிலும் இலங்கையிலும் இருக்கும் எனது இரு பெறா மகள்மார் (அக்காவின் பிள்ளைகள்) என்னுடன் தாமும் சேர்ந்து வாட்ஸ் அப் மூலம் பஜனை செய்வதற்குக் கேட்டார்கள். கனடாவில் வசிப்பவருடன் சேர்ந்து செய்ய இயலுமாக இருந்தது. நேர வித்தியாசத்தால் ஸ்ரீலங்காவில் இருப்பவருடன் சேர்ந்து செய்ய இயலவில்லை. சாதாரணமாகவே சமையல் செய்கையில் நான் ஏதாவது பாடல்கள் கேட்டுக் கொண்டே தான் சமைப்பேன். அப்படிச் செய்யும் போது வேலை இலகுவாக முடியும். இப்போ அந்தப் பாடல்களும் பக்திப் பாடல்களாக மாறின. 

எமது உடல் அமிலத்தன்மையாக மாறுவதும் இப்படியான நோய்கள் உருவாவதற்கு ஒரு காரணம் என்பதால் அதற்கும் மாற்றாக அப்பச்சோடாவைக் கொண்டு ஒரு மருந்து செய்து ஒருவருக்கு இவ்வியாதி குணமடைந்துள்ளதென மகள் வாங்கிய புத்தகம் ஒன்றில் இருந்து அறிந்து அம்மருந்தையும் செய்து கொடுத்துக் கணவர் உட்கொண்டார். மஞ்சள், வேம்பு இவையெல்லாம் இவ்வருத்தத்தை மாற்றும் என்று அறிந்து அவற்றையும் கணவர் பாவித்தார். ஆனால் இம்மருந்துகளெல்லாம் உண்மையிலேயே வேலை செய்கின்றனவா என்பதை எப்படி அறிவதென்று தெரியவில்லை. அதன் காரணத்தாலேயே ஆங்கில வைத்தியத்துக்கு மீண்டும் செல்லவேண்டி வந்தது.  

கணவரின் வயிற்றில் உள்ள கட்டியானது பித்தத்தை இரைப்பைக்குக் கொண்டு செல்லும் குழாயை அழுத்தியதால் வழமை போலப் பித்தம் செல்ல இயலாமல் உடலில் பித்தத்தின் அளவு அதிகரித்தது. அதனால் கண், உடலெல்லாம் மஞ்சள் நிறமாக மாறி, உடலில் ஒரு அரிப்புத்தன்மையும் தோன்றியது. கணவர் தோல் அரிப்புக்கு ஒரு வகைக் கிரீமைப் பாவித்தார். ஆனால் அது வேலை செய்யவில்லை. அத்துடன் உணவைச் செமிக்கச் செய்வதற்குரிய பித்தம் செல்லாததால் கணவரின் இரைப்பையில் உள்ள உணவு சரியாகச் செமிபாடடையவில்லை. அதனால் அவருக்குப் பசியும் அவ்வளவாக இருப்பதில்லை. எமக்கு இது தெரியவில்லை. நாம் வயிற்றில் உள்ள கட்டியால் தான் பசியில்லையென எண்ணிவிட்டோம். ஆனால் ஓங்கோலொஜிஸ்ட் என்று சொல்லப்படும் புற்றுநோய் மருத்துவருக்கு இது தெரிந்திருக்க வேண்டும். அவர் அதைப் பற்றிக் கவலைப்படாமல் கீமோத்தெரப்பி செய்வதற்குரிய நாளைக் குறித்துத் தந்தார்  (அப்பொய்ண்ட்மென்ட்). கீமோத்தெரப்பி செய்வதற்கு முதல்நாள் ஆஸ்பத்திரிக்குச் சென்று இரத்தப் பரிசோதனை செய்துவிட்டு ஒரு மணித்தியாலத்தால் அந்த டாக்டரை (ஒங்கோலொஜிஸ்டைச்) சென்று பார்க்கவேண்டும். அதன்படி முதல்நாள் ஆஸ்பத்திரி சென்று கணவர் பரிசோதனைக்கு இரத்தம் கொடுத்துவிட்டு ஒங்கோலொஜிஸ்ட்டைக் காணச் சென்றோம். எமது நல்ல காலம் அன்று கணவரின் ஒங்கோலொஜிஸ்ட் லீவு என்பதால் அவரது வாடிக்கையாளர்களை இன்னொரு பெண் மருத்துவர் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கணவரின் இரத்தப் பரிசோதனை முடிவுகளைப் பார்த்து விட்டு, ஜீஐ (GI) எனப்படும் இரைப்பை, சிறுகுடல் சம்பந்தமான டாக்டரிடம் கணவரை யாரும் அனுப்பவில்லையா எனக் கேட்டார். நாம் 'இல்லை' என்றோம். கணவரின் பித்தத்தின் அளவு இரத்தத்தில் மிக அதிகமாக உள்ளதால் கணவரை உடனே எமெர்ஜென்சி எனப்படும் அவசரச் சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லச் சொன்னார். 14 க்குள் இருக்கவேண்டிய எண்ணிக்கை 300 க்குக் கிட்ட இருந்தது. அப்படியெனில் போன கிழமையும் கூடத்தானே இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்த டாக்டர் அதைப் பற்றிக் கவலைப்படாமல் இப்படிச் செய்திருக்கிறார். அதனால் தான் கணவருக்கு உடலில் அரிப்பும் பசியின்மையும் இருந்திருக்கிறது. கடவுளருளால் இந்தப் பெண் டாக்டர் எமெர்ஜென்சிக்கு அனுப்பியதால் அவர்கள் கணவரை வார்டில் அனுமதித்து அவசரச் சிகிச்சை அளித்தார்கள். ஜீஐ டாக்டர் கணவரின் பித்தப்பைக்குள் ஸ்டென்ட் (stent) எனப்படும் நுண்ணிய துளையுள்ள மெல்லிய குழாய் ஒன்றைப் புகுத்திப் பித்தத்தைச் சிறுகுடலினுள் பாயும் படி செய்தார். அதன் காரணத்தால் கணவர் மூன்று நாட்களுக்கு ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டி வந்தது. அந்த நாட்களில் ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் மாறி மாறிச் சென்று கொண்டிருந்த காரணத்தால் பஜனை செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நான் நினைத்தேன் 'கடவுளுக்கு எனது நிலைமை தெரியும் தானே. எனவே நான் பஜனை செய்யாவிட்டாலும் அவருக்கு விளங்கும் தானே' என்று. அப்படித்தான் எனது பஜனை நின்றது. 

ஒருவாறாகக் கணவர் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்தார். பித்தத்தால் ஏற்பட்ட பிரச்சனைகளும் நின்றுவிட்டன. வழமையான மாதிரிப் பசி உணர்வும் வந்து விட்டது. கணவரின் ஓங்கோலொஜிஸ்ட்டை மாற்றுவதற்கு மகள் அந்தப் பெண் டாக்டரின் நர்ஸுக்கு ஃபோன் செய்து அவரை வேண்டி மனுச் செய்தாள். நல்லகாலம் அந்தப் பெண் டாக்டரும் கணவரையும் தனது வாடிக்கையாளராக ஏற்றுக் கொண்டார்.  

மகளின் வயிற்றில் இருந்த கரு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டு வந்தது. ஒருநாள் மகளின் கனவில் அவளின் அப்பம்மா (மாமி - கணவரின் தாயார்) வந்தார்கள். அக்கனவின் படி பார்த்தால் அவர் தான் பேத்தியின் வயிற்றில் பிள்ளையாக வந்திருப்பதாகத் தெரிந்தது. அத்துடன் பெண் பிள்ளையென்றும் தெரிந்தது. நவம்பர் மாதம் இருபத்தொன்பதாம் திகதி மகள் ஒரு பெண் மகவை ஈன்றெடுத்தாள். சிசேரியன் என்னும் அறுவைச்சிகிச்சை மூலமாகப் பிறந்ததால் இரு நாட்களின் பின் மகளும் மருமகனும் பிள்ளையை வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள். பேத்தியைக் கண்டதும் கணவருக்கு புதுத் தெம்பு பிறந்தது. சிறிது நாட்கள் அந்த மகிழ்ச்சியில் கழிந்தது. நாம் செய்து கொண்டிருந்த கை வைத்தியங்களும் தொடர்ந்தன. மஞ்சள், வேம்பு முதலிய தமிழ் மருந்துகளும் கணவர் உபயோகித்துக் கொண்டு தான் இருந்தார். 

முதல் ஒரு கட்டம் கீமோதெரப்பி முடிந்து ஸி ரி ஸ்கான் (C T scan) எடுத்துப் பார்த்தார்கள். நாமும் கணவர் வயிற்றில் உள்ள கட்டி கொஞ்சம் என்றாலும் சிறுத்துள்ளதென டாக்டர் சொல்வார் என ஒரு எதிர்பார்ப்புடன் சென்றால், ஒரு வித்தியாசமும் இல்லை என்றார் டாக்டர். மனம் எல்லாம் சோர்ந்து விட்டது. அதாவது கீமோதெரப்பியும் வேலை செய்யவில்லை, அதேநேரம் நாம் செய்த மாற்றுச் சிகிச்சைகளும் வேலை செய்யவில்லையென்பது மனச்சோர்வைத் தந்தது. ஆனால் பிறகு எண்ணிப் பார்த்தால் அது பரவாமல் இருப்பதே ஒரு நல்ல அறிகுறி தானே என எண்ணவும் தோன்றுகிறது. 

இரவு உணவின் பின்னர் தான் சிங்க்கிற்குள் (sink) சேர்ந்து கிடக்கும்  பாத்திரங்களைக் கழுவுவது. அப்போ கணவர் படுப்பதற்குச் சென்று விடுவார். முன்னர் எல்லாம் பாத்திரங்களை அப்படியே விட்டுவிட்டு மறுநாள் காலையில் தான் எல்லாவற்றையும் கழுவுவது. ஆனால் டொரோண்டோவுக்குக் கொண்டொமேனியம் எனப்படும் குடியிருப்பின் ஆறாவது மாடியில் நாம் வீடு வாங்கிக் கொண்டு வருகையில், அங்கு சிறிய வகைக் கரப்பான் பூச்சிகள் இருந்த காரணத்தால் இரவே பாத்திரங்களைக் கழுவா விட்டால் பூச்சிகள் மொய்த்து விடும். நல்லகாலம் அந்த வீட்டில் டிஷ் வோஷர் எனப்படும் பாத்திரங்களைக் கழுவும் மெஷின் இருந்ததால் இரவே பாத்திரங்களை அதனுள் போட்டுவிட்டு சமையலறை மேடை முழுவதும் சோப் நீரால் துடைத்து விட்டால் பூச்சிகள் வரமாட்டா. அதே பழக்கம் புது வீட்டுக்கு வந்தும் தொடர்ந்தது. எமது அந்த கொண்டமேனியம் வீட்டிலிருந்து சாமான்களைக் கொண்டு வரும் போது ஒரு சிறிய கரப்பான் பூச்சி வந்திருந்தாலும் போதும் இங்கு அவை பெருகுவதற்கு. எனவே அதைத் தவிர்ப்பதற்கு இரவே பாத்திரங்களைக் கழுவப் போட்டுவிட்டு மேடை முழுவதும் சோப் நீரால் துடைத்து விடும் பழக்கத்தைத் தொடர விரும்பினேன். புது வீட்டிலும் டிஷ் வோஷர் இருந்தது வசதியாக இருந்தது. இரவு உணவின் பின்னர் எல்லாப் பாத்திரங்களையும் டிஷ் வோஷரில் போட்டுவிட்டு மேடைகள் எல்லாம் சோப் நீரால் துடைத்து விட்டுத் தான் நான் படுக்கைக்குச் செல்வது. அப்போ மீண்டும் பாபாவின் யூ - டியூப் வீடியோக்களைக் கேட்க ஆரம்பித்தேன். பார்க்க என்று சொல்லாமல் கேட்க என்று ஏன்  சொல்கிறேன் என்றால் பாத்திரங்களை டிஷ் வோஷரில் அடுக்கும் போது இயர்ஃபோனின் (காதுகேள் பொறி) ஒரு நுனியை யூ - டியூப் வரும் கைபேசியிலும் மற்றைய இரு (கேட்கும் பகுதிகள்) நுனிகளையும் எனது இரு காதிற்குள்ளும் புகுத்திவிட்டுக் கைபேசியை உடையில் உள்ள சட்டைப் பையினுள் போட்டு விட்டு அதைக் கேட்டுக் கொண்டே டிஷ் வொஷரில் பாத்திரங்களை அடுக்குவேன். அப்போ அந்த வீடியோக்களில் பலரின் சொந்த பாபா அனுபவங்கள் போன்றன வரும். ஒருநாள் பிரஷாந்தி நிலையத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி யூ- டியூபில் வந்தது. பாபா எழுதிய 'வாகினி' என்ற பெயர்களைத் தாங்கிய நூல்களைப் பற்றிய நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தவர் ஒரு சம்பவத்தைப் பற்றிச் சொன்னார். ஒரு முறை ஒரு பக்தர் பாபாவிடம் "ஸ்வாமி எப்படி நாம் இறைவன் மீது அன்பு செலுத்தலாம்?" எனக் கேட்டாராம். அதற்கு பகவான் "இறைவன் மீது அன்பு செலுத்த வேண்டுமென்றால் இறைவனின் போதனைகளின் படி நீ நடந்து வர வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால் இறைவனில் நீ வைத்திருப்பது அன்பல்ல வெறும் விருப்பே" என்று உரைத்தாராம்.

பாபா தனது பதினான்காவது வயதில் தன் குடும்பத்தினரிடம் "நான் உங்களுக்குச் சொந்தமானவனில்லை; என்னை எனது பக்தர்கள் அழைக்கிறார்கள்" என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டுப் புறப்பட்ட பின்னர் தாயின் வேண்டுகோளுக்கு இணங்கத் தனது பிறந்த கிராமமாகிய புட்டபர்த்தியையே தனது பிரதான வசிப்பிடமாகக் கொண்டு இருந்ததும் புட்டபர்த்தியிலும் பக்கங்களில் உள்ள கிராமங்களிலும் குடிநீர்த்திட்டம், ஆஸ்பத்திரி, கல்லூரி முதலானவற்றை ஆரம்பித்து அதனைச் சென்னை வரை கொண்டு சென்றதும் அத்துடன் அவரது பிரதான வாசஸ்தலமாகிய பிரஷாந்தி நிலையத்திலிருந்து வெளிவரும் மாதசஞ்சிகையான 'சனாதன சாரதி'யில் அவரும் 'தர்மவாகினி', 'ஞானவாகினி' போன்ற தலைப்புகளில் பல கட்டுரைகளை எழுதியுள்ளதும் வாசித்து அறிந்துள்ளேன். வாகினி என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் பிரவாகம் என்ற அர்த்தமும் உண்டு. அந்தக் கட்டுரைகளெல்லாம் பின்னர் தனிப் புத்தகங்களாக வெளிப்பட்டதும் அறிந்துள்ளேன். அப்படியிருந்தும் பாபாவினால் எழுதப்பட்ட அந்த நூல்களை வாசிப்பதற்கு ஒரு போதும் நான் எண்ணியதில்லை. அதன் காரணம் தெரியவில்லை. ஆனால் அந்நிகழ்ச்சியை யூ- டியூபில் பார்த்த பிற்பாடு எனக்கு அவற்றை வாசிக்கும் விருப்பம் வந்தது. தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட அப்புத்தகங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் கூடப் பலர் மொழி பெயர்த்துள்ளனர். எனக்கு பிரசாந்தி இணைப்பு (Prashanthi Connect) என்ற ஒரு பிரயோகத்துக்கு (App) அழைப்பு வந்து அதனை எனது தொலைபேசியில் இணைத்துக் கொண்டேன். அதன் மூலம் இப்போ என்னால் பாபா எழுதிய நூல்களான பாகவத வாகினி, தர்ம வாகினி போன்றவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை ஒலி வடிவில் கேட்க இயலுமாக உள்ளது. அன்று பிரசாந்தி நிலையத்தில் இருந்து ஒளிபரப்பப்பட்ட அந்நிகழ்ச்சியில் உரையாற்றியவர் பாபாவின் 2000 க்கும் மேற்பட்ட உரைகள் பொது மக்களின் பார்வைக்கு உள்ளன எனவும் பாபா வாகினி தொடர்களில் 15 நூல்கள் வெளியிட்டிருக்கிறார் எனவும் உரைத்தார்.  

பாகவதவாகினியானது பாண்டவர்களின் பேரனான பரீட்சித் (அபிமன்யுவின் மகன்) பிறந்ததில் இருந்து ஆரம்பித்துப் படிப்படியாகக் கிருஷ்ணரின் கதை என விரிந்து செல்கிறது. 

தர்மவாகினி அழகாக நாம் செய்ய வேண்டிய தர்மம் என்னென்ன என விபரித்துக் கொண்டு செல்கிறது. இளம் வயதில் சில புத்தகங்கள் வாசித்ததனால் பெண்ணுரிமை போன்ற சில விஷயங்களைப் பற்றி எனக்கு ஏற்பட்டிருந்த சில தப்பபிப்பிராயங்கள் பாபாவின் தர்மவாகினியைக் கேட்டதும் தான் நீங்கியது என்று சொல்லவேண்டும். அதில் பாபா இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் உரிய கடமைகளை அழகாக விபரித்துக் கொண்டு செல்கிறார். 

அடுத்ததாக நான் தியான வாகினியைக் கேட்டேன். அதில் தியானம் செய்யும் முறையையும் இறைவனின் நாமத்தை நாம் உச்சரிப்பதால் வரும் நன்மைகளையும் பாபா அழகாக விபரித்துக் கொண்டு செல்கிறார். இப்போ இந்து சமயத்தில் இருக்கும் சில தப்பபிப்பிராயங்களையும் (சாதி வேறுபாடு போன்றன) அனைவருக்கும் புரியும் விதமாக பாபா விளக்கிக் கொண்டு செல்கிறார். 

பின்னர் நான் பாபாவின் உபநிஷதவாஹினியைக் கேட்டேன். பாடசாலையில் சமயப்பாடத்தில் இந்து சமயத்தில் உபநிஷதங்களைப் பற்றிப் படித்துள்ளேன். அவற்றின் சில பெயர்கள் கூடப் படித்த ஞாபகம். ஆனால் உண்மையில் அவற்றில் என்ன உள்ளதென்பது தெரியாது. இப்போ தான் அவற்றில் என்ன உள்ளதென்பதைப் பற்றியும் அவை எப்படி உருவாக்கப்பட்டன என்பதைப் பற்றியும் அறியக்கூடியதாக உள்ளது. 

கணவரின் ஒங்கோலோஜிஸ்ட் இப்போ வேறு வகையான கீமோத்தெரப்பி ஒன்றைத் தொடங்கினார். அதாவது கீமோத்தெரப்பி என்பதே வெவ்வேறு வகையான மருந்துகளின் சேர்க்கை. அந்தக்கலவையை இரத்தத்தில் ஏற்றுவதன் மூலம் புற்றுநோய்க் கிருமிகளை அழிப்பதே கீமோத்தெரப்பி. அந்த இரசாயன மருந்துக் கலவை இரத்தத்தில் ஏற்றப்படுவதால் அது எமது மற்றைய உயிரணுக்களையும் பாதிக்கிறது. இந்தப் புதிய கீமோத்தெரப்பியானது கொஞ்சம் வலிமை வாய்ந்த மருந்துகளைக் கொண்டது போலும். கிழமையில் இருநாட்கள் சென்று மருந்து ஏற்றிவிட்டு வருவார். தெரப்பியின் பாதிவழியிலேயே மிக மோசமான பக்கவிளைவுகள் வரத்தொடங்கி விட்டன. இவரால் நடக்க இயலவில்லை; கதைக்க இயலவில்லை. அது மூளையையும் பாதித்ததோ தெரியவில்லை இவரால் ஒழுங்காக யோசிக்கக் கூட இயலவில்லை. "இப்படியே போனால் நான் விரைவில் போய் விடுவேன்" என்று இவர் சொல்லத்தொடங்கி விட்டார். அதனால் பாதிவழியிலேயே அந்த கீமோவை நிற்பாட்டி விட்டோம்.           

காரட் சாறு புற்றுநோய்க்கு நல்லது என்பதால் மகள் மரக்கறிகளில் இருந்து சாறு பிழியும் ஒரு மெஷினை வாங்கி ஒவ்வொரு நாளும் அப்பாக்கு காரட் ஜூஸ் கொடுத்துக் கொண்டு வந்தாள். ஆங்கில வைத்தியத்தில் இவ்வருத்தத்தை முழுவதுமாக மாற்ற இயலாதென்பது தான் அவர்களின் முடிவு. கொஞ்ச நாட்களுக்கு தள்ளிப் போடலாம் என்பதாகத் தான் சொன்னார்கள். ஆனால் மகள் வாங்கிய புத்தகம் ஒன்றில் பல வழிகளில் அதனை முழுவதுமாக மாற்றியதையெல்லாம் அறிந்து கொண்டோம். அத்துடன் எமது தமிழ் வைத்தியத்தில் இதனை மாற்றலாம் என்று லண்டனில் இருக்கும் இவரின் மாமியின் மகள்      

No comments:

Post a Comment